அளவற்ற அருளாளனுக்கு
ஸஜ்தாச் செய்யுங்கள்!
திருக்குர்ஆனில் ஸஜ்தா வசனங்கள் எத்தனை
என்பதில் கருத்து வேறுபாடுகள்
இருக்கின்றன. வழக்கம் போல் மத்ஹபு
வாரியாகவும் ஸஜ்தா வசனங்கள்
பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸஜ்தா
வசனங்களுக்கு ஷாஃபி மத்ஹபினர் ஸஜ்தா செய்ய
வேண்டும். இந்த வசனங்களுக்கு ஹனஃபி
மத்ஹபினர் ஸஜ்தா செய்ய வேண்டியதில்லை
எனவும் எவ்வித ஆதாரமும் இல்லாமல் ஸஜ்தா
வசனங்களை மத்ஹபு வாரியாகப் பிரித்து
வைத்துள்ளனர்.
ஸஜ்தா வசனங்கள் எத்தனை?
என
இணையத்தில் வந்த கட்டுரையைப் பார்க்க.
திருக்குர்ஆனில் இடம் பெறும் ஸஜ்தா
வசனங்களில் சில வசனங்களுக்கு நபி (ஸல்)
அவர்கள் ஸஜ்தா செய்திருக்கிறார்கள் என்று
ஆதாரப்பூர்வமான நபிவழிச் செய்திகள் நமக்கு
அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளிலிருந்து
குர்ஆனை ஓதும் பொழுதும், தொழுகையில்
குர்ஆனை ஓதும் பொழுதும் ஸஜ்தா வசனத்தை
ஓதினால், ஓதுவதை அப்படியே நிறுத்திவிட்டு
ஒரு ஸஜ்தா வேண்டும். செய்த பின் மீண்டும்
அடுத்த வசனத்திலிருந்து ஓத வேண்டும்.
ஸஜ்தா வசனங்களை ஓதினால் ஸஜ்தா செய்ய
வேண்டும் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
மூலமாக, இறைவன் இச்சமூகத்துக்கு
வழிகாட்டலை அறிவித்திருக்கிறான்.
குர்ஆனில் ஸஜ்தா வசனங்கள் உள்ளன,
அவ்வசனங்களை ஓதினால் ஸஜ்தா செய்ய வேண்டும்
என்பதில் மார்க்கத்தில் என்றும்,
எவரிடமும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை!
எனவே நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்த
வசனங்களைப் பார்த்து விட்டு, அது போன்ற
வேறு சில ஸஜ்தா வசனங்களை ஓதினாலும்
அதற்காக ஸஜ்தா செய்தால் அது நபிவழிக்கு
முரணாகுமா? என்பதை இங்கு பரிசீலிப்போம்.
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்த வசனமும்,
அது போன்ற வேறு வசனங்களும்.
''அல்லாஹ்வுக்கே
ஸஜ்தா செய்து வணங்குங்கள்'' (053:062)
மேற்கண்ட
இறைவசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா
செய்தார்கள் என அறிவிப்புகள் உள்ளது.
புகாரி, 1067, 1070, 3853, 3972, 4863.
முஸ்லிம், 1007, திர்மிதீ, 524.
''அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்து
வணங்குங்கள்'' என்று இறைவன் கூறுவதில்
கட்டளை அடங்கியுள்ளது. இந்த வசனத்தை ஓதிய
போது நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா
செய்தார்கள். குர்ஆனில் இது போன்று வேறு
வசனங்களும் உள்ளன அதைப் பார்ப்போம்.
''அளவற்ற
அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்''
(025:060)
''அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச்
செய்யுங்கள்'' (041:037)
திருக்குர்ஆன் 053:062வது வசனம் என்ன
கட்டளையிடுகிறதோ, அதைப் போன்ற கட்டளை
தான் 025:060, 041:037 வசனங்களிலும்
உள்ளது.
அடுத்த வசனம்,
''தமது இறைவனிடம்
மன்னிப்புக் கேட்டார். பணிந்து
விழுந்தார்.'' (038:024)
038:024வது
வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா
செய்திருக்கிறார்கள். புகாரி, 1069, 3422.
திர்மதீ, 526.
''சூனியக்காரர்கள்
ஸஜ்தா செய்து விழுந்தனர்'' (026:046)
இறைவனின் அத்தாட்சிகளைக் கண்டு ஸஜ்தாவில்
விழுந்தனர் என்ற பொருளில் இந்த வசனம்
கூறுகிறது.
அடுத்த வசனம்,
''அவர்களுக்குக்
குர்ஆன் ஓதிக் காட்டப்படும் போது ஸஜ்தா
செய்வதில்லை'' (084:021)
இந்த வசனத்திற்கு
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா
செய்திருக்கிறார்கள். புகாரி, 766, 768,
1074, 1078. முஸ்லிம், 1009, 1010, 1011,
1012, 1013. திர்மிதீ, 523.
''அல்லாஹ்வுக்கு
ஸஜ்தா செய்ய மாட்டார்களா?'' (027:025)
அடுத்த வசனம்,
''அவனுக்குக்
கட்டுப்படாதீர்! ஸஜ்தா செய்வீராக!
நெருங்குவீராக! (096:019)
இந்த வசனத்திற்கு
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தா
செய்திருக்கிறார்கள். முஸ்லிம், 1010,
1011, திர்மிதீ, 523,
''உமது இறைவனைப்
புகழ்ந்து போற்றுவீராக! ஸஜ்தா செய்வீராக!
(015:098)
''இரவில் அவனுக்கு ஸஜ்தா செய்வீராக! நீண்ட
இரவு அவனைத் துதிப்பீராக! (076:026)
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தார்கள் என
அறிவிக்கப்படும் ஸஜ்தா வசனங்களில் உள்ள
தூண்டுதல் போல் நாம் எடுத்தெழுதிய
குர்ஆன் வசனங்களிலும் உள்ளது. அதாவது,
இந்த வசனங்களும் ஸஜ்தா செய்வதற்கு
ஆர்வமூட்டுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்து காட்டாத
வசனங்கள் எவ்வாறு ஸஜ்தா வசனங்கள் ஆகும்?
என்ற கேள்வியெழலாம் - நபி (ஸல்) அவர்கள்
செய்யாத ஒன்று ''பித்அத்'' அல்லவா?
என்றும் கேட்கத் தோணலாம். நபி (ஸல்)
அவர்களால் ஏவப்படாத எந்தச் செயலும்
மார்க்கத்தில் பித்அத் என்பதில் நமக்கும்
மாற்றுக் கருத்து இல்லை! இங்கு நாம்
சொல்ல வருவது இதுதான்,
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை குர்ஆனும்
சுன்னாவும் என்பது நாம் அறிந்ததே. எது
ஒன்றுக்கும் குர்ஆனில் முதலில் பார்க்க
வேண்டும் என்ற அடிப்படையில் ஸஜ்தாவின்
வசனங்களை அணுகும் போது பல்வேறு
வசனங்களுக்கு ஸஜ்தா செய்ய
ஆர்வமூட்டப்பட்டுள்ளதை அறியலாம். அந்த
இடங்களில் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று
விரும்புபவர்கள் செய்து கொள்ளலாம். அது
பித்அத் கிடையாது.
''அல்லாஹ்வுக்கே
ஸஜ்தா செய்து வணங்குங்கள்'' (053:062)
''அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச்
செய்யுங்கள்'' (025:060)
இரண்டு வசனத்திலும் ஒரே ஏவல்
அடங்கியிருக்கும் போது விரும்புவர்
இரண்டு வசனத்திற்கும் ஸஜ்தா செய்தால் அது
பித்அத் கிடையாது.
எனவே ஸஜ்தா வசனங்கள் நான்கு மட்டும் என்று
முடிவெடுப்பது சரியான முடிவாக இருக்க
முடியாது(அல்லாஹ் மிக அறிந்தவன்)
|