www.idhuthanislam.com

மனிதத்துவ அவலம் 'வரதட்சனை'

அபு அஃப்ரின் - முத்துப்பேட்டை

 
வளர்ச்சியடைந்த பற் பல நாடுகளில் தலையாய பிரச்சனையாக இருந்துக்கொண்டு இருப்பது வரதட்சணை தான். இத்தகைய பண மோகம் பிடித்த கொடுமையானது பல பேரின் வாழ்க்கையினை பாதியில் மாய்த்துக் கொள்ள தூண்டுகிறது. இன்னும் சில பேரினை இப்படியாக மாற்றி விடுகிறது. ஆம்..! சீரியலால் தினந்தோறும் கண்ணீர் விடும் மாமியாரும் நாத்தனாரும் கண்ணீர் விட வைத்தனார் வீட்டின் மருமகளை வரதட்சணையால். பேனா முனை வலிமையானது ஆனால் மருமகளை கொழுத்துவதில் வலிமையானது மாமியாரின் கொடுங்கை முனைகள்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் இத்தகைய கொடுமைகள் வட மாநிலங்களில் அதிகமாக அதிகரித்து விட்டது. ராஜஸ்தான், பீகார், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் வரதட்சணைக்காக வேண்டி பாலர் திருமணங்களானது யாருக்கும் தெரியாமல் கொடிக்கட்டி பறக்கிறது எனலாம். இத்தகைய மாநிலங்களில்; உள்ளவர்கள் யாரும், வெளி நபர்களிடம் திருணங்களை முடிப்பது இல்லை. கூடுமான வரையில் இங்குள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மூடப்பழக்கம் உள்ளவர்களாகவும் பழமையினை பற்றி பேசுவர்களாகவும் உள்ளார்கள். இதனால் வெளி நபர்களிடம் திருமண சம்மந்தங்களை பேசுவது கிடையாது.

தம்முடைய மகனோ, அல்லது மகளோ திருமணம் முடிந்தவுடன் நிம்மதியாக வாழ்வதை நாம் காணவேண்டும் என்ற கொள்கையினை இவர்கள் முற்றிலுமாக கடைப்பிடிப்பதால் எத்தனையோ வரதட்சணையை ஆண் வீட்டார்கள் கேட்டாலும் அதனை கொடுக்க பெண் வீட்டார்கள் தயங்குவது கிடையாது. வைராக்கியம் பிடித்த பெண் வீட்டார்கள் இருக்கும் போது ஆண் வீட்டாருக்கு என்ன கவலை இருக்கிறது. இதனால் பெண் வீட்டார்கள் அங்கு இருக்கும் நிலச்சுவத்தாரிடம், அல்லது அங்குள்ள பண திமிர் பிடித்த செல்வந்தரிடம் தாம் குடி இருக்கும் வீட்டையோ அல்லது தம்முடைய நிலத்தையோ குறைந்த விலைக்கு விற்கிறார்கள். நிலமோ அல்லது வீடோ இல்லாதவர்கள் தன்னுடைய ஆயுளை இவர்களிடம் அடகு வைக்கிறார்கள். அந்த பணக்காரர்களிடம், இவர்கள் நாள் முழுவதும் உழைக்க வேண்டும் என்பதில் எந்த விதமான பாகு பாடும் கிடையாது. இன்னும் ஒரு சில நபர்கள் ஒரு படி தாழ்ந்தும் விடுகிறார்கள் ஆம்.. நிலப்பிரபுகளிடம் கட்டிய மனைவியினை பணத்திற்காக அடகும் வைக்கிறார்கள் என்பதனை ஊடங்கள் வாயிலாக படிக்கும் போது மனதிற்கு வேதனை தான்.

மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டு விட்டன, அவர்கள் செய்த(தீய) வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும் படிச் செய்வதற்காக (இவ்வாறு சோதிக்கிறான், அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பி விடலாம்.' சங்கைமிகு அல் குர்ஆன் 30: 41

வட மாநிலங்களில் இருந்து பல இளைஞர்கள் தற்போது லண்டன், அமெரிக்கா மற்றும் உள்ள மேலை நாடுகளில் வசிக்கிறார்கள். வரதட்ணைக்கு ஆசைப்பட்டு, விடுமுறைக்காக இந்தியாவிற்கு வரும் போது ஒரு திருமணத்தினையும், அவர்கள் வசிக்கும் நாட்டில் ஒரு திருமணத்தினையும் செய்கிறார்கள் தைரியமாக. இந்த செய்தியினை என்றாவது கேள்விபடும் முதல் மனைவியோ அல்லது இரண்டாவது மனைவியோ தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு போய்விடுகிறார்கள். அவர்களுக்கு என்ன மனைவி இறந்தால் மறுபடியும் புது மாப்பிளை, புது தெம்பு, புது உற்சகம் என்ற போர்வையினை போர்த்திக்கொள்கிறார்கள். வரதட்சணை அவர்கள் வாசலை தான் திறக்கிறது. பணங்கள் அவர்களை தீயவைகளை செய்ய தூண்டுகிறது. இத்தகைய செயல்களை செய்வது படிக்காத இளைஞர்கள் யாரும் அல்ல. நன்றாக படித்த பட்டம் பெற்ற பாட்டதாரிகளும், மருத்துவர்களும், இஞ்சீனியர்களும் தான் என்றால் மிகையாகாது.

எதை விட்டும் நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களோ அத்தகைய பெரும் பாவ(மான காரிய)ங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) தீயவைகளை உங்களை விட்டும் நாம் போக்கி விடுவோம். இன்னும் சங்கையான நுழைவிடத்தில் உங்களை நாம் நுழைவிப்போம்.' சங்கைமிகு அல் குர்ஆன் 4: 31

தென் மாநிலங்களை பொறுத்த வரையில் கேரளா, தமிழ் நாடு போன்ற இடங்களில் வரதட்சணையால் பெண்கள் தற்கொலைகள் அதிகரித்து விட்டது என்று சொல்வதே விட வராத தட்சணையால் ஆண்கள் மனம் புலம்பி அதிகளவில் தற்கொலை முயற்சிக்கு எளிதாக ஆளாகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கேரளாவில் திருமணத்திற்கு வரதட்ணையாக மணமகனுக்கு பெண்வீட்டார்கள் கொடுப்பது பல லட்சங்களை அத்துடன் வீட்டுக்கு வரும் மணமகன் பெயருக்கு பல லட்சங்கள் மதிப்புள்ள வீடு ஒன்றினையும் அன்பளிப்பாக கொடுக்கிறர்கள். ஏன்..!..?. இத்தகைய கொடுமைகள் நம்முடைய தமிழ் நாட்டிலும் ஒரு சில ஊர்களில் இன்றும் நடைபெற்றுக்கொண்டு தானே இருக்கிறது. கேரளாவில் வயதுக்கு வராத சிறுவர்களும், நடக்க முடியாத பெரியவர்களையும் தவிர மற்ற எல்லோரும் வெளி நாட்டில் தான் இருக்கிறார்கள். ஏனெனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் என்பதனை விட வரதட்சணை மகனுக்கோ அல்லது மகளுக்கோ கொடுக்க வேண்டுமே என்ற நோக்கத்திலும் மற்றும் வரதட்சணை பெண் வீட்டாரிடம் இருந்து வாங்க வேண்டுமே என்ற நோக்கத்திலும் பல பேர்கள் வெளி நாட்டில் வசிக்கிறார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

இன்றைய நவீன உலகில் கணிப்பொறி என்ற சாதனத்தினை பல இளைஞர்கள் பணத்திற்காக பற்பல பெண்களை திருமணம் முடிக்கும் செயலுக்காக மட்டுமே பயன் படுத்துகிறார்கள். இணையத்தளத்தில் Matrimony என்ற பகுதிக்கு சென்றால் பல பெண்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதினை கருத்தில் கொண்ட வக்கீரப்புத்திக்கொண்ட பல இளைஞர்கள் அகப்படும் பெண்களிடம் நன்றாக பேசி பழகி அவர்களின் வலையில் எளிதாக விழ வைக்கிறார்கள். இவ்வாறு மயங்கும் பெண்கள் பலரையும் மணம் முடிக்கவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் டில்லியில் ஒரு இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யபட்டார் என்ற செய்தியினை நாம் ஊடகத்துறையில் படித்து இருப்போம். அவர் பல பெண்களை ஏமாற்றியதாகவும், பள்ளி மற்றும் கல்லுரி செல்லும் பெண்களிடம் நைசாக பேசி அவர் வலையில் விழவைத்தார் என்றும், அத்துடன் பல பெண்களிடம் பேசுவதற்கென்று பல செல்போன்களை வைத்து இருந்தார் அதுபோல் அவரிடம் இருந்து 25க்கும் மேற்பட்ட சிம்கார்டும் பறிமுதல் செய்யபட்டது என்பதினையும் நாம் அறியலாம். இதனை எதற்காக செய்தாய்.. என்று அவரிடம் கேட்ட போது, எனக்கு பணம் அதிகம் வேண்டும் பல பெண்களை திருமணம் செய்துக்கொண்டால் அவர்களிடம் இருந்து பணத்தினை எளிதாக பெற முடியும் என்று சொல்லி உள்ளான்.

இவற்றினை அறியாத பெண்கள், ஒரு கணவன் தான் நாம் இவனுடன் தான் வாழ் நாள் முழுவதும் வாழ வேண்டும் என்ற கனவு ஆசையில் இருப்பார்கள். ஆனால் காலங்கள் சில என்பததை விட நாள்கள் சில செல்லும் போதே கட்டிய கணவனின் கீழ்த்தரமான புத்தியானது தெரிய வந்து விடும். பாவம்..! என்ன செய்வார்கள். இதனால் கணவனால் கைவிடப்பட்ட இப்பெண்கள் பல தவறான பாதையில் சென்று விட வாய்ப்பாக இது அமைகிறது. இத்தகைய கொடுமைகள் பலவற்றிற்கும் முதல் காரணமாக இருப்பது என்னவென்று பார்த்தால் வரதட்சணையைத்தான் நாம் சொல்ல வேண்டும்.

வீட்டிற்கு வந்த மருமகளை எந்த ஒரு மாமியாரும் அந்த பெண்ணை மருமகளாக நினைக்காமல் தன்னுடைய மகள் என்ற தோணியிலும், வீட்டிற்கு வந்த மருமகள் புகுந்த வீட்டிலுள்ள அனைவரையும் தன்னுடைய சொந்தங்கள் என்ற தோணியிலும் குறிப்பாக மாமியாரை தன்னுடைய தாய் என்ற பாணியிலும் கவனிக்க வேண்டும். கோயிலுக்கு அர்ச்சனை செய்வதை தவறவிடும் மாமியார்களும் மற்றும் நாத்தனார்களும் மருமகளுக்கு அர்ச்சனை செய்வதை தவறவிடுவதில்லை என்ற சொல்லானது மாறுவதற்கு வரதட்சணையை இல்லாமல் ஆக்கினால் இங்கு வாய்ப்பு அதிகம்.

ஒரு குடம் பாலில் சிறு துளி விஷம் எந்த மாதிரியாக இருக்கும் அது போல் நம்முடைய சமுதாயம் என்ற பாலை விஷமாக மாற்றிக்கொண்டு இருக்கும் வரதட்சணையை நாம் எல்லோரும் நினைத்தால் ஒழிக்கலாம், ஒற்றுமை இருந்தால். இளைஞர்களே..! சிந்தியுங்கள்.. செயல்படுவோம் ஒழிப்போம் வெறும் கெ()டும் தட்சணையை.. உருவாக்குவோம் ஒரு புதிய சமுதாயத்தை.. தீன் எனும் மார்க்கமாம் இஸ்லாம் வழியில்.

வரதட்சணையை மறைவாகவும் மற்றும் வெளிப்படையாகவும் வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் எந்த காலத்திலும் அனுமதிப்பதில்லை. பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணம் முடியுங்கள் என்று ஆணித்தரமாக திருமறை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

'நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமணக் கொடைகளை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை, அவர்கள் (தங்கள்) மனமார உங்களுக்கு விட்டுக்கொடுத்தால் அதனை நீங்கள் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.சங்கைமிகு அல் குர்ஆன் 4: 4'

வரதட்சணை வாங்காமலும் மற்றும் கொடுக்காமலும் இருப்பதற்கு நாம் முயற்சிப்போம். அதன் மூலமாக இறைவனின் அருள் கிடைக்க வாய்ப்பானது அமையும். இன்ஷா அல்லாஹ். மஹர் கொடுத்து மண முடிப்போம். இதனை நம் சமுதாயம் ஒற்றுமையாக இருந்து கடைப்பிடித்தால் வரதட்சணையை என்ற பேயினை இல்லாமல் ஆக்கலாம். ஒற்றுமை இல்லாமல் போய் விட்டதால் தான் அந்த பேய் இந்த சமுதாயத்தினை பல சீர் கேடான பாதைக்கு கொண்டு செல்கிறது.

ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற புள்ளி விவரமானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கிரைம் பதிவின் (National Crime Records Bureau)  ஆய்வின் படி, 2006 ஆம் ஆண்டில் 2,276 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டு உள்ளனர் என்று குறிப்பிடுகிறது. ஒரு நாளைக்கு ஆறு பெண்கள் என்ற விகிதத்தின் படி (Six a day on an average)  தற்கொலை செய்து கொள்கிறார்கள். 2005 ஆம் ஆண்டில் 2,305 பெண்களும், 2004ஆம் ஆண்டில் 2,585 பெண்களும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இந்த புள்ளி விவரமானது பதிவு செய்யபட்டவைகளாகும். பதிவு செய்யப்படாதவைகள் இதனை விட அதிகமாக தான் இருக்கும்.

மத்தியப்பிரதேச மாநிலமானது இந்த பதிவின் படி, நான்காவது முறையாக முதல் இடத்தில் உள்ளது. சென்ற வருடக்கணக்கின் படி, அங்கு நான்கில் ஒரு பெண் என்ற விகித்தின் படி தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர். 585 பெண் தற்கொலைகள் அங்கு நடந்து உள்ளதாக பதிவு செய்யபட்டுள்ளன. மேற்கு வங்காளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு 445 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. உத்திரப்பிரதேசம் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 314 பெண்கள் வரதட்சணையால் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன.

படிப்பவர்களின் பார்வைக்கு : இக்கட்டுரையின் சில பகுதிகள் சீமான் அமைப்பினர் ஆகஸ்ட் 5- 2007 கீழக்கரையில் நடத்திய - இஸ்லாமியப் பெண்கள் விழிப்புணர்வு மாநாட்டின் சிறப்பு மலரில் வெளியிடப்பட்டுள்ளது.
 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை