www.idhuthanislam.com

விரும்பியவர்களுக்கு அனுப்ப....     முதல் பக்கம்
 

இஸ்லாம்

             அமெரிக்க பெண் எழுத்தாளர் ஒருவரின் பார்வையில்..           

தமிழில் முத்துப்பேட்டை. அபூஅஃப்ரின்

இஸ்லாம் பற்றி ஏகாதிபத்திய சக்திகள் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் இக்காலத்தில், அமெரிக்கா நாட்டைச்சார்ந்த பெண் எழுத்தாளர் சகோதரி சுமையா மீஹான் (தற்போது அவர் குவைத் நாட்டில் வசிக்கிறார்) எழுதிய கட்டுரை ஒன்றினை துபாயிலிருந்து வெளிவரும் Khaleej Times  என்ற ஆங்கில தினசரி 3.8.07 ம் தேதி வெளியிட்டு இருந்தது. அவருடைய கட்டுரையை அடிப்படையாக கொண்டு இந்த ஆக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அன்றைய காலக்கட்டத்தில் மூடப்பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், பழமை வாதங்கள் பேசிக்கொண்டு இருந்து, சிலை வணக்கங்களால் ஓரிறைக்கொள்கையினை மறந்த மக்கள் விழித்தெழுந்தது என்னவோ இனிய மார்க்கமாம் இஸ்லாம் தோன்றிய பின் தான் என்பது திண்ணமே. விட்டில் பூச்சிகளாய் இருந்த மக்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கில், ஏக இறைவன் அல்லாஹ் பல நபிமார்களையும் மற்றும் தூதர்களையும் இவ்வுலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அவற்றில் முக்கியமாக குறிப்பிட்டால், முதல் நபியாக ஆதம் (அலை), இப்ராஹீம் (ஆப்ரஹாம்)(அலை), மூஸா (மோசஸ்); (அலை) மற்றும் ஈஸா நபி (ஜீஸஸ்) (அலை) என்று சொல்லலாம். இவ்வாறு இறைவன் பல நபிமார்களை உலகிற்கு அனுப்பி அவர்களுக்கு வேதங்களையும் அருளியுள்ளான்.

ஏகத்துவ கொள்கையினை கடைப்பிடித்த ஈஸா நபி அவர்கள், தன்னுடைய சமுதாய மக்களிடம் கூறும் போது, உங்கள் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக்கொண்டு உங்களிடம் நான் வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, எனக்கு கீழப்படியுங்கள் (என்றும்) ' நிச்சயமாக அல்லாஹ் தான் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனும் ஆவான் (ஈஸாவாகிய நானல்ல) ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள். இது தான் நேரான வழி என்றும் கூறினார்.'

ஈஸா நபி அவர்களுக்கு இன்ஜீல் என்ற வேதம் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டது. பின் வந்த மக்கள் அதனை பைபிள் என்ற பெயரால் பல மாற்றங்களையும், அவரவர்களின் சொந்த கருத்துக்களையும் அதில் புகுத்தி (இன்ஜீல்); பைபிளின் புனித தன்மையினை மாசுபடுத்தி விட்டனர். அத்துடன் புதிய ஏற்பாடு என்றும் பழைய ஏற்பாடு என்றும் மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். அதனை பற்றி கிறிஸ்துவ தலைமையிடமான இத்தாலியில் உள்ள வாடிகனும் (Vatican) இது பற்றி தன்னுடைய கருத்தினை குறிப்பிடும் போது, பைபிளில் பல பகுதிகள் தொலைந்து விட்டன என்கிறது.

உலக மக்கள் அனைவருக்கும் இறுதியான வேதமாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகவும் அல்லாஹ்வின் இறுதி தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதமாக புனித திருமறை திருக்குர்ஆன் உள்ளது.

'(நபியே முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை - இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்படுத்தக்கூடியதாக (இது) இருக்க, உம்மீது அ(த்தகைய) வன் தான் இறக்கி வைத்தான், தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.' திருக்குர்ஆன் 3:3

கி.பி 570 ஆம் ஆண்டில் நபிகளார் அவர்கள் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்கள். அவர்கள் பிறக்கும் முன்பே அவருடைய தகப்பனார் இறந்து விட்டார். தாயார் ஆமீனாவும் மற்றும் பாட்டானார் அப்துல் முத்தலீப் அவர்களும் நபிகளாரை வளர்த்தனர். நபி அவர்கள் ஆறு வயது அடைந்த சமயத்தில், உறவினர்களை பார்க்கும் நோக்கில் யாத்ரிப் (Yathrib)  (தற்போது உள்ள மதீனா நகரம்) என்ற நகருக்கு சென்றார்கள். அங்கு அவருடைய தாயார் இறந்து விட்டார்கள். முஹம்மது நபி அவர்கள், அடிமைப்பெண்ணான பராகாவின் (Barakah)  உதவியால் தன்னுடைய தாயாருக்கான இறுதி சடங்குகளை செய்தார்கள். பாட்டானார் அவர்களின் வளர்ப்பில் நபிகளார் வளர்ந்தது என்னவோ இரண்டு வருடங்கள் மட்டும் தான். நபிகளார் 10 வயது கடக்கும் முன்பே, அவருக்கு மிகவும் பிடித்தமான மூன்று சொந்தங்களை இழந்து விட்டார்கள்.

அப்துல் முத்தலிப் அவர்களின் இறப்பிற்கு பின், அவருடைய மகனாரான அபூதாலீப் அவர்களின் கண் காணிப்பில் நபிகளார் வளர்ந்தார்கள். நபி அவர்களும், அடிமைப்பெண்ணான பராகா அவர்களும், அபூதாலீப்பின் மாமாவான ஏழைக்குடும்பத்தை சார்ந்த ஒருவரின் இடத்திற்கு சென்றனர். அங்கு நபிகளார் அவர்களுக்கு ஆடு மேய்க்கும் தொழில் கொடுக்கப்பட்டது. அவர் இருக்கும் இடத்திலிருந்து மலைப்பிரதேசங்களுக்கு ஆடு மேய்க்க செல்லும் போது, நபிகளாரின் வயது உடைய பல சிறார்கள் மது குடித்துக்கொண்டும் மற்றும் வீணான காரியங்களில் விளையாடிக்கொண்டும் காலத்தினை கழித்தார்கள். நபிகளார் இத்தகைய தீய குணங்களிலிருந்து விலகி இருந்தார்கள்.

அபூதாலீப் அவர்கள் நபிகளார் அவர்கள் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்கிணங்க விதவைப் பெண்ணான கதீஜா அவர்களிடம் வேலைக்காக சேர்த்தார்கள். கதீஜா அவர்களுக்கும் சிரியாவுக்கு வியாபார பொருட்களை கொண்டு சென்று விற்பதற்கு நம்பிக்கையான நபர் தேவையாக இருந்தது. தனது மக்களால் நம்பிக்கையாளர் (“The Trustworthy” )  என்று அன்பாக அழைக்கப்பட்ட நபிகளார் சிரியாவுக்கு பயணமானார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையில் கண்ணும் கருத்துமாய் செய்தனர். நபிகளாரின் நற்பண்புகளை கண்ட அன்னை கதீஜா அவர்கள், அண்ணலார் மீது விருப்பங்கொண்டார்கள். நபிகளாரின் சம்மதம் கிடைத்தது. அந்த திருமணம் நடக்கும் போது நபிகளாரின் வயது 25. அன்னை கதீஜாவின் வயது 40. அவர்களுடைய வாழ்க்கையானது மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றது. அந்த தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகளும் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தது. ஆண் குழந்தைகள் இரண்டும் சிறு பிராயத்திலேயே இறந்து விட்டனர். நபிகளார் சிறு வயதில் இருந்தே சிலைவணக்கத்தை வெறுப்பவர்களாக இருந்தனர். அனைத்து படைப்பினங்கள் பற்றி சிந்திப்பவர்களாகவும், மனிதர்களை நேர்வழி பெற வேண்டுமே என கவலையுள்ளவர்களாகவும் இருந்தனர்;. இந்த கவலையுடன் அடிக்கடி தனிமையில் ஹிரா குகையில் சென்று சிந்திப்பவர்களாக இருந்தார்கள் அண்ணலார்.

610 ம் வருடத்தில் ஹிரா குகையில் நபி அவர்களுக்கு முதன்முதலாக இறைவனிடமிருந்து வஹீ அருளப்பட்டது. 'முஹம்மதே.. நீர் ஓதுவீராக.. என்று முதலில் குரல் ஒன்று கேட்டது. நான் படிக்க வில்லையே..! எழுத வில்லையே..! ஆகையால் எனக்கு ஓத தெரியாது என்று அவர்கள் கூறி விட்டார்கள். அடுத்த முறையும் அந்த குரல்.. 'முஹம்மதே.. நீர் ஓதுவீராக.. அவர்களின் பதில் மீண்டும் அதுவாக தான் இருந்தது. மூன்றாவது முறையும்.. அந்த குரல் ஒலித்தது.. முஹம்மதே.. நீர் ஓதுவீராக என்றது. நபி அவர்கள் நான் எதனை ஒதுவது என்று அந்த குரலுக்கு பதில் கூறினார்கள். அப்போது திருக்குர்ஆனின் சூரத்துல் அலக் அத்தியாத்தியாத்தின் சில பகுதிகளை நபி அவர்கள் ஓதினார்கள்.

ஒருவரின் குரல் கேட்டது.. 'நீங்கள் தான் அல்லாஹ்வின் திருத்தூதர்.. நான் ஜீப்ரீல் என்று சொன்னது. அதைக்கேட்ட நபிகளார் கால்கள் பின்ன தன்னுடைய வீட்டிற்கு ஒடினார்கள். அவருடைய மனைவியிடம் நடுக்கத்தால் 'என்னை போர்த்துங்கள் என்னை போர்த்துங்கள்' என்று கூறினார்கள்.

நபிகளாரின் மனைவியான அன்னை கதீஜா அவர்கள், அவருடைய வயது ஒத்த வராகா (Waraga)  என்ற உறவுக்கார கிறிஸ்துவரிடம் இதனை பற்றி சொன்னார்கள். அதற்கு அவர்கள் முஹம்மதுடன் பேசிய மலக்கு தான் மோசஸ் அவர்களுடனும் பேசியவர் என்று சொன்னார்கள். கதீஜா அவர்கள் திரும்பி வீட்டுக்கு வந்தப்பின், முஹம்மது அவர்கள் படுக்கையை விட்டு எழுந்து இருந்தார்கள்.

இறைவனின் தூதுச்செய்தியினை நான் எப்படி அறியாமையில் மூழ்கிப்போன மக்களுக்கு எத்தி வைப்பேன் என்று அவர்கள் மனைவியிடம் சொன்னார்கள். நான் சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்களே என்று கவலைப்பட்டார்கள் நபி அவர்கள். ஆனால் 'உங்களின் இறைச் செய்தியினை நான் ஏற்றுக்கொள்கிறேன். இஸ்லாத்தினை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய பெண்களில் நான் முதலாவதாக இருக்கிறேன் என முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள் அன்னை கதீஜா (ரழி).

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், உலக மக்கள் அனைவரையும் நேர் வழியின் பால் வழி நடத்திச் செல்லக்கூடியாராகவும், நல் வழி படுத்தக்கூடியராகவும் இருந்தார். இஸ்லாம் மார்க்கத்திற்காக மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைத்து மதத்திற்கும் ஒரு வழி காட்டியாகவும் இருக்கிறார். அரசியல்துறை, பொதுத்துறை, பொருளாதாரத்துறை, ஆட்சி அமைப்பு போன்ற உள்ள மற்ற துறைகளுக்கும் ஒரு வழிகாட்டியாகவும் அவர் இருக்கிறார்.

'விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள். (அவனது) தூதருக்கும் கீpழ்படியுங்கள். இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும், அவனது தூருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலை) வர்களுக்கும் கீழப்படியுங்கள். ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும், (அவனுடைய) தூதரிடமும் திருப்பி (ஒப்படைத்து) விடுங்கள்.(அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்.) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், இது தான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்'. திருக்குர்ஆன் 4: 59

மனித உரிமையினை பேணி பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்று நடப்பதில் நபிகளார் முதன்மையாக சிறந்து விளக்கினார். மற்றும் பெண்ணுரிமைக்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்கள். ஒரு பெண் தன்னுடைய விரும்பத்திற்கிணங்க ஒரு ஆண் துணையினை தேர்வு செய்து கொள்ளும் உரிமையினையும் மற்றும் அந்த ஆணை அவரின் விருப்படியே விவாகரத்து செய்யும் உரிமையினையும் இஸ்லாம் கற்று கொடுத்து உள்ளது. பண்டையக்காலத்தில், பெண்கள் அவர்களின் விரும்பத்திற்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள். ஆனால் இஸ்லாம் மட்டும் தான் பெண்கள் தன்னுடைய உரிமையினை பேணி காக்கக்கூடியதான வகையில் அமைத்து தந்தது.

மற்றும், மக்கள் அனைவரும் சமம். எல்லோரும் ஒரு இனம் என்ற கோட்பாட்டினை தந்ததும் இஸ்லாம் தான் அதில் ஒன்றும் மறைவில்லை. 'இறைவன் கூறுகிறான் :

'மனிதர்களே.. நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.' திருக்குர்ஆன் : 49:13

நபிகள் நாயகம் தன்னுடைய இறுதி உரையில் கூறும் போது,

'கறுப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கறுப்பரோ சிறந்தவரல்லர், அரபியரை விட அரபியல்லாதவரோ, அரபில்லாதவரை விட அரபியரோ சிறந்தவரல்லர். இறையச்சம் உடையரே உங்களில் சிறந்தவர்.'

தற்போது உலகில் எல்லா தரப்பு மக்களுக்கும் விரும்பக்கூடிய மதமாக இஸ்லாம் மார்க்கம் உள்ளது. மற்றும் மக்களிடையே பல உன்னத மாற்றங்களையும் இஸ்லாம் கற்று தந்துக்கொண்டு இருக்கிறது. தற்போது உலகில் இஸ்லாத்தினை மனமுவந்து ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1.6 பில்லியன் என்று அந்த கட்டுரையாசிரியை கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் மற்றும் கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு பொறுமையை கடைப்பிடித்ததால் தான் இஸ்லாம் இப்பூமியில் செம்மையாக தழைத்து நாள்தோறும் வளர்ந்து வருகிறது. வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேற யாரும் இல்லை என்று முழு நம்பிக்கைக்கொண்ட உண்மை மூமின்களாக நாம் இருக்கின்றோம். அவனையே வணங்குகின்றோம். அவனிடமே உதவியும் தேடுகின்றோம். பின்னர் அவனிடமே மீளப்போகிறோம் என்பதில் சந்தேகம் இல்லாதவர்களாக இருக்கின்றோம்.

Source: Khaleej Times – 3.08.2007

Written by : Sumayyah Meehan (Kuwait based American writter who embraced Islam)

 

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகத்தின் உலக வலை