|
இன்று உலகம் வேகமாக ஒரு இருட்டை நோக்கி சென்று
கொண்டிருக்கிறது. எதையெல்லாம் இறைவன் மனிதர்களுக்கு
தடை செய்தானோ அந்த வழிகேடுகளையெல்லாம் மனிதன் தேடித்
தேடி அந்த கெட்ட வழியில் நடக்கின்றான்.
விபச்சாரம் - இன்று சீரழிக்கும் சினிமாவின் மூலமும்,
இண்டர்நெட் மற்றும் தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு
சாதனங்கள் வாயிலாகவும் சரி தான் என்று வாதாடப்பட்டு
நடு வீதியிலே தடைகளின்றி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
மது – ஒரு காலத்தில் மது அருந்துபர்களை மது
அருந்தாதவர்கள் கேவலமாக பார்த்த சூழ்நிலைகள் மாறி மது
அருந்துபவர்கள் அதனை அருந்தாதவர்களை ஏதோ வேற்றுக் கிரக
வாசிகளைப் பார்ப்பது போல் பார்க்கும் சூழலில் உள்ளது.
வட்டி – உலக மயமாக்கல் என்னும் நாகரீகமான பெயரால் பல
வீடுகளையும், நாடுகளையும் வாட்டி வதைத்துக்
கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து ஒரு பெரும்பான்மை
கூட்டம் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறது.
பயங்கரவாதம் - அப்பாவி பொது மக்களை அவர்கள்
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக 'தீவிரவாதி'
பட்டம் குத்தி அவர்களின் உயிர்கள் கூட்டம் கூட்டமாக
பறிக்கப்படுகிறது.
இப்படி இன்றைய சூழலின் அவல நிலையை நாம் பேசிக்கொண்டே
இருக்கலாம். மொத்ததில் இன்று உலகம் உலகமாக இல்லை.
மாறாக மனிதர்களை அழித்து அந்த இரத்ததிலே உயிர் வாழும்
மனித மிருகங்கள் கரங்களிலே சிக்கி சின்னா
பின்னப்படுத்தப்படுகிறது.
இந்த அவல நிலையை யார் போக்குவது? வலியவர்களினால்
வதைக்கப்படும் எளியவர்களை யார் காப்பது? நீதியை யார்
நிலை நாட்டுவது? என்பது போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு
நாம் அளிக்கும் ஒரே பதில் 'ஆலிம்' பெருமக்கள் தான்
என்பதே..!
ஆம்.. ஆலிம்களால் மட்டுமே இந்த உன்னதமான பணிக்கு தலைமை
தாங்கி முன்னெடுத்துச் செல்லும் தகுதி உள்ளது. ஒரு
அறிஞர் அழகாகச் சொன்னார் 'ஆலிம்கள் (அறிஞர்கள்) அந்த
சமுதாயத்தின் இதயத்தைப் போன்றவர்கள்.' உண்மைதான் மனித
உடலில் இதயம் எப்படி கெட்ட இரத்தங்களை சுத்திகரித்து
நல்ல இரத்தத்தை பாய்ச்சுகிறதோ அதே போல் சமுதாயத்தில்
நிலவும் தீமைகளை சுத்திகரித்து நன்மைகளாக மாற்றும்
பொறுப்பு ஆலிம்களுக்கே உள்ளது.
இதனை வரலாற்றின் வரிசையில் பார்த்தால் நிதர்சனமான
உண்மையும் ஆகும். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னால் சிலை வணங்கிகளாக, கண்டதே காட்சி கொண்டதே
கோலம் என வாழ்ந்து வந்த ஒரு சமுதாயத்தை தன்னந்ததனி
ஆளாக நின்று அல்லாஹ் தனக்கு தந்த அறிவாற்றைக் கொண்டு
துணிச்சலுடனும், விவேகத்துடனும் எதிர் கொண்டு அந்த
மக்களை வென்றெடுத்த அல்லாஹ்வின் தோழர் நபி இப்ராஹீம்
(அலை) அவர்கள் இன்றைய அறிஞர் பெருமக்களுக்கு ஒரு முன்
மாதிரி இல்லையா..!
அல்லது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் ஒட்டு மொத்த
அரபுலகமே அறியாமை இருளில் அகப்பட்டு அறியாமையும்
மூடப்பழக்க வழக்கங்களையுமே மார்க்கம் என வாழ்ந்து வந்த
போது அவையனைதையும் எதிர் கொண்டு அதனால் கல்லடியையும்,
சொல்லடியையும் பெற்றாலும் தான் கொண்ட கொள்கையில்
எடுத்துக் கொண்ட இலட்சியப்பணியில் தளராது நின்று ஒரு
புனித மிக்க சமுதாயத்தை இந்த உலகம் இது வரை கொண்டிராத
முன் மாதிரி மனிதர்களை உருவாக்கிச் சென்ற
நபி (ஸல்) அவர்கள் ஒரு
மாபெரும் அறிஞர் தானே.. அவர்களின் வாழ்வு நமக்கு ஒரு
முன் மாதிரியாக இருக்கிறதே..
இந்த புரட்சிகள் எல்லாம் நபிமார்களோடு நின்று
விடவில்லை. அவர்களை பின் தொடர்ந்து வந்த அறிஞர் பெரு
மக்கள் எல்லாம் அவரவர்களின் காலத்தில் நடந்த கொடுமைகளை
எதிர்த்து போராடிய வரலாறுகள் நம் கண் முன்னே தெளிவாகவே
இருக்கின்றன.
கடந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த மனித சமுதாயத்தை
புணரமைக்கும் போராட்டத்தில் அந்த போராட்டங்களின்
தலைவர்களாக வீற்றிருந்தவர்களெல்லாம் மார்க்க அறிஞர்களே
என்றால் மிகையாகாது.
கி.பி 1885 ல் இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணியின்
பாராளுமன்ற சபையிலே ஒரு விவாதம் நடந்தது. அது
முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை (கிலாஃபத்தை) எப்படி
தகர்த்தெறிவது என்பது தான். அப்போது அங்கிருந்த
கிளாட்ஸ்டோன் என்ற பாராளுமன்ற உறுப்பினர் எழுந்து
'கிலாஃபத்தை உடைக்க வேண்டுமென்றால் நான் சொல்லும்
ஆலாசனைகளை கேளுங்கள்' என்றார். அது முதலாவது
முஸ்லிம்களையும் குர்ஆனையும் நாம் பிரிக்க வேண்டு;ம்.
இரண்டாவது முஸ்லிம்களின் ஜும்ஆ தொழுகையை வீரியமற்றமாக
ஆக்க வேண்டும். மூன்றாவது முஸ்லிம்களின் ஹஜ் கடமையை
வெறும் சடங்கு மற்றும் சம்பிரதாயமாக ஆக்க வேண்டும்'
என்றார்.
அவர் சொன்னது போலவே திட்டங்கள் தீட்டப்பட்டு கி.பி
1924 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ம் நாள் முஸ்லிம்களின்
உலகத் தலைமை பீடம் (கிலாஃபத்) தகர்த்தெறியபட்டது.
இன்று வரை முஸ்லிம்கள் ஒரு முழுமையான தலைமை இல்லாத
மக்களாகவே இருக்கிறார்கள். அந்த கிலாஃபத்
உடைக்கபட்டதும் எகிப்து நாட்டிலே ஒரு மாபெரும் இலட்சிய
போராளிகள் இயக்கம் இறைவனின் உதவியோடு அதன் ஆரம்ப
புள்ளியை எழுதியது. அல்லாஹ்வின் கருணையால் அந்த
இயக்கம் இன்று வரை போராடி வருகிறது. அந்த இலட்சிய
போராளிகளை உருவாக்கியவர்கள் ஒரு மார்க்க அறிஞர்
(ஆலிம்) தான். அவரின் பெயர் இமாம் ஹசனுல் பன்னா(ரஹ்).
அந்த இயக்கத்தின் பெயர்; 'இஹ்வானுல் முஸ்லிமுன்'
ஆகும்.
அதே போல் இங்கே இந்தியா, பாகிஸ்தான், வங்க
தேசம்,இலங்கை ஆகிய நாடுகளிலும் ஒரு அறிஞர் சமூக
கொடுமைகளை எதிர்த்து மாபெரும் இயக்கம் கண்டு, அதிலே பல
இலட்சிய சகோதரர்களையும் உருவாக்கி இன்று வரை சமூக
கொடுமைகளை எதிர்த்துப் போராடவும் வைத்தார். அவரின்
பெயர் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களாவார்கள். அந்த
இயக்கம் தான் ஜமாஅத்தே இஸ்லாமி.
இப்படி வரலாற்றின் வழி நெடுகிலும் சமூகத்தீமைகளை
எதிர்த்துப் போராடுவதிலே, நன்மையை ஏவி
தீமையைத்தடுக்கும் பணிகளிலே பெரும் பெரும் புரட்சிகளை
ஏற்படுத்தியவர்கள் ஆலிம் பெருமக்கள் தான் என்றால் அது
மிகையல்ல.
ஆலிம் பெருமக்கள் தகுந்ந நேரங்களிலே களமிறங்கி
பணியாற்றவில்லையென்றால் நாம் பெரும் பெரும் இன்னல்களை
சந்திக்க வேண்டி வரும். ஆம்.. ஷாபானு வழக்கைப் பற்றி
நாம் அனைவரும் அறிவோம். அந்த வழக்கு நிலுவையில் இருந்த
சமயம் நமது நாட்டை ஆட்சி செய்தவர் ராஜீவ் காந்தி
அவர்கள், அவர்களிடம் சில இஸ்லாமிய விரோதிகள் ஷாபானு
வழக்கை மேற்கொள் காட்டி இஸ்லாத்தில் 'ஜீவனாம்சம்'
இல்லை. ஆகவே நாம் பொது உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர
வேண்டும் என்று கூக்குரலிட்டனர். பிரதமர் அவர்களும்
பொது உரிமைச் சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்த நேரம்
தான் நாமெல்லாம் ' அலீமியான்' என்று பாசத்தோடு
அழைக்கும் இமாம் ஹசன் அலி நத்வீ (ரஹ்) அவர்கள் ராஜீவ்
காந்தியை சந்தித்து இஸ்லாம் பெண்களுக்கு
எப்படியெல்லாம் உரிமைகள் வழங்கியுள்ளது என்பதை தௌ;ளத்
தெளிவாக விளக்கினார்கள் அதன் பின்பே பிரதரும் மனம்
மாறினார்.
ஆக ஆலிம் பெருமக்களே..! நீங்கள் இன்றைய சூழலை மனதில்
வைத்து உடனே களமிறங்கவில்லையென்றால் சமூக விரோதிகள்,
மனித மிருகங்கள் இவ்வுலகை நாசமாக்கி விடுவார்கள்..
உடனே புறப்படுங்கள்.. ஆலிம் பெரு மக்களே..! உங்கள்
பணிகளோ தாராளம்.. ஏராளம்..
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
'மறுமை நாளில் ஓர் அடியான் கீழகண்ட நான்கு
வினாக்களுக்கு அல்லாஹ்வினடம் பதிலளிக்காத வரை ஒரு அடி
கூட நகர முடியாது.
1. உனது வாழ்க்கை எந்த வழிகளில் செலவிட்டாய்?
2. உனது இளமைப் பருவத்தை எந்த வழிகளில் செலவிட்டாய்?
3. எவ்வழிகளில் சம்பாதித்தாய்? எவ்வழிகளில் அதை
செலவிட்டாய்?
4. பெற்ற கல்வியின் மூலம் என்ன செய்தாய்?
அறிவிப்பாளர்: முஆத் பின் ஜபல் (ரலி) - ஆதாரம்:
ஃதபரானீ
(தொகுப்பு: ராஜப்பாளையம். ஷஃபீக்
- புரைஜா)
|